கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்: அறிகுறிகள், காரணம், வகை, பரிசோதனை மற்றும் தடுப்பு

Dr. Prachi Benara
Dr. Prachi Benara

MBBS (Gold Medalist), MS (OBG), DNB (OBG), PG Diploma in Reproductive and Sexual health

16+ Years of experience
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்: அறிகுறிகள், காரணம், வகை, பரிசோதனை மற்றும் தடுப்பு

Table of Contents

பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் ஒன்று கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய். இருப்பினும், இதன் நேர்மறையான அம்சம் என்னவென்றால், இது மிகவும் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாகும். ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) பரிசோதனையின் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலமாகவும் வாழ்க்கைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமாகவும் இந்த நோயின் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம். இருப்பினும், இதை தடுப்பதற்கு பல வழிகள் இருந்தாலும்கூட, உலகெங்கிலும் உள்ள ஏராளமான பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த நோயைக் கையாளுவதற்கு விழிப்புணர்வும் அதைப் பற்றிய அவசியமான தகவல்களும் மிக முக்கியமாக உள்ளன. இந்த கட்டுரையில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள் முதல் அதன் பரிசோதனை, தடுப்பு மற்றும் சிகிச்சை வரை அனைத்து விஷயங்களையும் விவாதிப்போம்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்றால் என்ன?

கர்ப்பப்பை வாயில் உள்ள அசாதாரணமான செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரத் தொடங்கும் போது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. கர்ப்பப்பை வாய் என்பது கருப்பையை பிறப்புறுப்புடன் இணைக்கிற கருப்பையின் குறுகிய கீழ் பகுதியாகும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான முக்கிய காரணம், HPV இன் அதிக ஆபத்துள்ள விகாரங்களின் நீண்ட கால தொற்றாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு இந்த வைரஸை அழித்துவிடுகிறது. இருப்பினும், சில பெண்களில், இந்த வைரஸ் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். இந்த வைரஸ் கர்ப்பப்பை வாய் செல்களை அசாதாரணமாக மாற்றத் தொடங்கி, பின்னர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயாக மாறுகிறது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயில் கவனம் செலுத்துவது ஏன் முக்கியம்?

உலகளாவிய புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ​​கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது பெண்களில் காணப்படும் பொதுவான புற்றுநோய்களில் நான்காவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேர்கள் பாதிக்கப்படுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதே ஆண்டில் 3 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். சுகாதார வசதிகள் அல்லது பரிசோதனை ஏற்பாடுகள் குறைவாக உள்ள நாடுகளில், பொதுவாக இந்த புற்றுநோய் முற்றிய நிலையை அடைந்த பின்னரே கண்டறியப்படுகிறது. இதுவே அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு மிகப்பெரிய காரணமாகும். மாறாக, தடுப்பூசி மற்றும் பரிசோதனை அமைப்புகள் நடைமுறையில் உள்ள நாடுகளில், பாதிக்கப்பட்டோர் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க, HPVக்கான தடுப்பூசி, பரிசோதனை மற்றும் பிற நடவடிக்கைகள் உள்ளிட்ட சிறந்த வழிகள் உள்ளன. உலக சுகாதார அமைப்பின் குறிக்கோள், 2030 ஆம் ஆண்டிற்குள் பரவலான தடுப்பூசி மற்றும் பரிசோதனை திட்டங்கள் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதாகும்.

உடலில் கர்ப்பப்பை வாயின் பங்கு

இனப்பெருக்க அமைப்பில் கர்ப்பப்பை வாய் முக்கிய பங்கு வகிக்கிறது. இது விந்தணுக்கள் கருப்பையை அடைவதற்கான ஒரு வழியாக செயல்படுகிறது, மாதவிடாய் இரத்தம் மாதவிடாய் காலங்களில் வெளியேற அனுமதிக்கிறது மற்றும் பிரசவத்தின் போது விரிவடைந்து குழந்தை வெளியே வருவதை எளிதாக்குகிறது. உடலில் அது இருக்கும் இடம் மற்றும் அதன் அமைப்பின் காரணமாக, தொற்று ஏற்படுவதற்கான பெரும் ஆபத்தில் கர்ப்பப்பை வாய் உள்ளது. எனவே, அது ஹியூமன் பாப்பிலோமா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் வருவதற்கு இதுவே மிகப்பெரிய காரணமாகும்.

பெரும்பாலான HPV நோய்த்தொற்றுகள் தானாகவே சரியாகிவிட்டாலும், தொற்று தொடர்ந்தால், அது கர்ப்பப்பை வாயின் செல்களில் புற்றுநோயை உண்டாக்க ஆரம்பிக்கலாம். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், புற்றுநோய் முற்றிய நிலையை அடைந்துவிடும்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள்

பல நேரங்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் வெளிப்படையான அறிகுறிகள் ஆரம்ப நிலைகளில் கண்டறியப்படுவதில்லை. இருப்பினும், அது வளரும் போது, ​​பல்வேறு வகையான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து மருத்துவ ஆலோசனையைப் பெறுவது பயனுள்ள சிகிச்சைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வோம்:

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள்

  1. அசாதாரணமான இரத்தப்போக்கு
  • மாதவிடாய்களுக்கு இடையே ஏற்படும் இரத்தப்போக்கு
  • நீண்ட நாட்கள் நீடிக்கும் மாதவிடாய்
  • மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் இரத்தப்போக்கு
  • உடலுறவுக்குப் பிறகு ஏற்படும் இரத்தப்போக்கு
  1. துர்நாற்றம் வீசும் பிறப்புறுப்பு வெளியேற்றம்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பிறப்புறுப்பில் இருந்து அசாதாரணமான வெளியேற்றத்தை கவனிக்கலாம். இது இயல்பை விட அதிகளவில் வெளியேறி துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

  1. இடுப்பு பகுதியில் வலி

இடுப்பு பகுதியில் நீடித்த வலி அல்லது உடலுறவின் போது ஏற்படும் வலி ஆகியவை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகளாகும். குறிப்பாக புற்றுநோய் அடுத்த கட்டத்தை அடையும் போது, வலி தெளிவாக உணரப்படுகிறது.

  1. சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் சிக்கல்

முற்றிய நிலையை அடைந்த பிறகு, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அருகிலுள்ள சிறுநீர்ப்பை அல்லது மலக்குடல் போன்ற உறுப்புகளுக்கும் பரவத் தொடங்குகிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படும். சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரில் இரத்தப்போக்கு அல்லது மலம் கழிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படலாம்.

  1. சோர்வு மற்றும் எடை இழப்பு

விளக்க முடியாத திடீர் எடை இழப்பும், மிகவும் சோர்வடைதலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் முற்றிய நிலைகளின் அறிகுறிகளாகும். இதற்குக் காரணம், இந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்கு நமது உடல் சக்தியை செலவழித்துக்கொண்டே இருப்பதே.

எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?

மேற்கூறிய அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். புற்றுநோயைப் பொறுத்தவரை, தாமதப்படுத்துவது ஆபத்தை அதிகரிப்பதாகும். இருப்பினும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தவிர வேறு மருத்துவப் பிரச்சனைகளாலும் இத்தகைய அறிகுறிகள் ஏற்படலாம், ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால், சரியான மற்றும் வெற்றிகரமான சிகிச்சைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான காரணங்கள்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முக்கியமாக HPV வைரஸின் அதிக ஆபத்தான விகாரங்களின் தொற்றினால் ஏற்படுகிறது. இருப்பினும், இந்த புற்றுநோயின் வளர்ச்சிக்கு வேறு பல காரணிகளும் காரணமாக உள்ளன. இந்த நோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் இந்த காரணங்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

  1. HPV தொற்று

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) என்பது 100 க்கும் மேற்பட்ட வைரஸ்களின் கூட்டாகும், அவற்றில் சில விகாரங்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. HPV பொதுவாக பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது. எனவே, பாலுறவில் ஈடுபடும் பெண்கள் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் HPV இன் இரண்டு பொதுவான அதிக ஆபத்துள்ள விகாரங்கள் HPV-16 மற்றும் HPV-18 ஆகும். உலகம் முழுவதும் காணப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் 76 சதவீத பாதிப்புகளுக்கு இந்த இரண்டு விகாரங்களும் காரணமாகின்றன.

HPV தொற்று பொதுவாக தானாகவே சரியாகிவிடும், ஆனால் சில சந்தர்ப்பங்களில், வைரஸ் உடலில் தங்கி, படிப்படியாக கர்ப்பப்பை வாய் செல்களை சேதப்படுத்தத் தொடங்குகிறது. இது பின்னர் புற்று நோயாக மாறுகிறது.

  1. புகைபிடித்தல்

புகைபிடித்தல் நமது நோயெதிர்ப்பு அமைப்பில் நேரடியான விளைவை ஏற்படுத்தி, அதை பலவீனமடையச் செய்கிறது. இதன் காரணமாக, HPV உள்ளிட்ட பிற நோய்த்தொற்றுகளை எதிர்த்து நமது உடல் போராடுவதற்கான அதன்  ஆற்றலும் பலவீனமடைகிறது. ஆய்வின்படி, சிகரெட் பிடிக்காத பெண்களை விட, சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். இது தவிர, புகைபிடித்தல் மற்ற புற்றுநோய்கள் மற்றும் பிற சுவாச நோய்களையும் ஏற்படுத்தும்.

  1. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக, HIV. AIDS நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்தப் புற்றுநோய் அதிகமாகப் பரவலாம். இதன் காரணம் தெளிவாக உள்ளது. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு, HPV தொற்று மற்றும் பிற புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை எதிர்த்துப் போராடுவதில் குறைந்த ஆற்றலையே கொண்டிருக்கும்.

  1. சிறு வயதிலேயே பாலியல் உறவில் ஈடுபடுதல் மற்றும் பலருடன் உறவு வைத்துக்கொள்ளுதல்

சில ஆய்வுகளின்படி, இளம் வயதில் உடலுறவு கொள்வதும் HPV தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, ஒன்றுக்கு மேற்பட்ட துணைகளுடன் உடலுறவு கொள்வதும் HPV பரவும் அபாயத்தை அதிகரிக்கிறது. உடலுறவின் போது ஆணுறைகளைப் பயன்படுத்துவது, HPV மற்றும் பிற பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளை (STI-கள்) தடுக்க உதவுகிறது.

  1. பிற காரணங்கள்
  • கருத்தடை மாத்திரைகள்: கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்துவதும் அதிகமான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகளுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  • குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது: தங்கள் குடும்பத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்கனவே யாருக்கேனும் இருந்திருந்தால், அந்த குடும்பத்துப் பெண்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • மோசமான உணவுப் பழக்கம்: அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்து புற்றுநோய்க்கான அபாயம் அதிகரிக்கும். எனவே, உணவில் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சேர்த்துக் கொள்வது அவசியம்.

மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களை இந்த அட்டவணையில் எளிதாகப் புரிந்துகொள்வோம்.

காரணம் தாக்கம்
HPV தொற்று கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு 75% காரணம்
புகைபிடித்தல் இரண்டு மடங்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி HPV நோய்த்தொற்று எதிராக போராட முடியாது
சிறு வயதில் உடலுறவு HPV நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்

 

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் வகைகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களின் அடிப்படையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பிரிக்கப்படுகிறது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் இரண்டு முக்கியமான வகைகள்:

ஸ்குவாமஸ் செல் கார்சினோமா

ஸ்குவாமஸ் செல் கார்சினோமா என்பது மிகவும் பொதுவான வகை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயாகும். சுமார் 70-80% கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகள் இதுவாகத்தான் இருக்கும். இந்த புற்றுநோய், கர்ப்பப்பை வாயின் வெளிப்புறத்தில் இருக்கும் மெல்லிய மற்றும் தட்டையான ஸ்குவாமஸ் செல்களில் உருவாகிறது. பெரும்பாலும், வழக்கமான பாப் ஸ்மியர் சோதனைகள் மூலம் இது ஆரம்ப கட்டங்களிலேயே கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சையை சாத்தியமாக்குகிறது.

அடினோகார்சினோமா

அடினோகார்சினோமா கர்ப்பப்பை வாய் கால்வாயின் சுரப்பி செல்களில் வளரும். இது ஸ்குவாமஸ் செல் கார்சினோமாவை விட குறைவாகவே பரவுகிறது, ஆனால் இது மிகவும் ஆபத்தானது மற்றும் ஆக்ரோஷமானது. பாப் ஸ்மியர் சோதனை போன்ற வழக்கமான பரிசோதனை மூலம் இதைக் கண்டறிவது கடினம். இருப்பினும், வெற்றிகரமான சிகிச்சைக்கு முன்கூட்டியே இதைக் கண்டறிவது அவசியம்.

அரிய வகை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயில் பல அரிய வகைகளும் உள்ளன. சிறிய செல் கார்சினோமா, தெளிவான செல் கார்சினோமா, நியூரோஎண்டோகிரைன் கட்டி போன்றவை இதில் அடங்கும். இந்த புற்றுநோய்கள் மற்றவற்றை விட மிகவும் தீவிரமானவை, இவற்றுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனையின் உதவியுடன், ஆரம்ப கட்டங்களிலேயே இதைக் கண்டறிவது எளிதாகிறது, இதனால் நோயாளி சிகிச்சைகள் மூலம் நிவாரணம் பெறுகிறார். இந்த வகை பரிசோதனைக்கு பல முறைகள் பயன்படுத்தப்படுகின்றன:

  1.   பாப் ஸ்மியர் சோதனை (பாப்பானிக்கோலா சோதனை))

பாப் ஸ்மியர் சோதனையானது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான மிகவும் பொதுவான முறையாகும். இந்த சோதனையே மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதில், கர்ப்பப்பை வாயின் செல்கள் அகற்றப்பட்டு, அதன் செயல்பாடுகள் எவ்வளவு அசாதாரணமாக உள்ளது என்பதை அறிய ஆய்வு செய்யப்படுகிறது. இது புற்றுநோய் மற்றும் புற்றுநோய்க்கு முந்தைய நிலைகளைக் கண்டறிய உதவுகிறது. இந்த சோதனை மூலம், அசாதாரணமான செல்கள் புற்றுநோயாக மாறுவதற்கு முன்பே அடையாளம் காணப்பட்டு, சரியான நேரத்தில் சிகிச்சையளிக்க முடிகிறது.

  1.   HPV DNA சோதனை

HPV DNA சோதனை, கர்ப்பப்பை வாய் செல்களில் அதிக ஆபத்தான HPV விகாரங்கள் இருப்பதைக் கண்டறியும். பொதுவாக 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களில் பாப் ஸ்மியர் சோதனையுடன் கூட இந்த சோதனையும் செய்யப்படுகிறது. இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உருவாகும் அபாயத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குகிறது.

  1.     அசிட்டிக் அமிலத்தைக் கொண்டு பார்வை மூலம் ஆய்வு செய்தல் (VIA)

குறைந்த வளம் உள்ள பகுதிகளில் பாப் ஸ்மியர் சோதனைக்கு செலவு குறைந்த மாற்றாக VIA உள்ளது. இதில், வினிகர் போன்ற ஒரு கரைசல் கர்ப்பப்பை வாயில் பயன்படுத்தப்படுகிறது, இதன் காரணமாக அசாதாரணமான செல்களின் நிறம் வெண்மையாகத் தோன்றத் தொடங்கும். இந்த முறை மூலம், நோயாளிக்கு புற்றுநோய் அபாயம் உள்ளதா, இல்லையா என்பது கண்டறியப்படுகிறது. இந்த வழியில், அதைத் தொடர்ந்து செய்யப்படும் பரிசோதனையும் சிகிச்சையும் எளிதாக்கப்படுகிறது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைக்கான வழிகாட்டுதல்கள்

வயது வகைப்பாடு எப்போது பரிசோதனை செய்துகொள்வது?
21-29 மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் சோதனை
30-65 ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் மற்றும் HPV DNA சோதனைகள்
65-க்கு மேல் முந்தைய சோதனைகளில் பிரச்சனை இல்லாவிட்டால், மேலும் சோதனைகள் தேவையில்லை

 

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழி, அது உருவாகும் முன் அதைத் தடுப்பதே. தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தை நீங்கள் பெருமளவில் குறைக்கலாம். அத்தகைய முறைகள் பற்றிய தகவல்கள் கீழே உள்ளன:

  1. HPV தடுப்பூசி

புற்றுநோயின் மிகப் பொதுவான விகாரமான HPV தடுக்க HPV தடுப்பூசி உதவுகிறது. பொதுவாக, இந்த தடுப்பூசி குழந்தை பருவத்திலோ அல்லது இளமை பருவத்திலோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இந்த தடுப்பூசி பாலியல் செயல்பாடு தொடங்கும் முன் கொடுக்கப்பட வேண்டும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், 45 வயது வரை இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளாத பெண்களும் தங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு இதைப் பெறலாம்.

  1. பாதுகாப்பான பாலியல் நடைமுறைகள்

உடலுறவின் போது ஆணுறைகளைப் பயன்படுத்துவது HPV நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. சிறு வயதிலேயும் பலருடனும் உடலுறவு கொள்வதை தவிர்ப்பதும் கூட, HPV பரவும் அபாயத்தைக் குறைக்கிறது.

  1. புகைபிடிப்பதைத் தவிர்ப்பது

புகைபிடிப்பதைத் தவிர்ப்பது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. புகைபிடிக்கும் பெண்களுக்கு HPV தொற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது.

  1. தொடர்ச்சியான உடல்நல பரிசோதனை

உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து தேவையான பரிசோதனைகளை செய்துகொள்வதன் மூலம், பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையில் எளிதில் குணப்படுத்த முடியும். எனவே தொடர்ச்சியான பரிசோதனைகள் மிகவும் முக்கியம்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான சிகிச்சை தேர்வுகள்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான சிகிச்சையானது அதன் நிலை, வகை மற்றும் நோயாளியின் உடல்நிலையை பொறுத்தது. சிகிச்சையின் முக்கிய முறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

  1. அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை பொதுவாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் மிகவும் பயனுள்ள சிகிச்சையாகும். பல வகையான அறுவை சிகிச்சைகள் உள்ளன. உதாரணமாக:

  • கன்னிசேஷன்: கர்ப்பப்பை வாயின் குறுகிய முன் பகுதியை அகற்றுதல்.
  • ஹிஸ்டரெக்டோமி: கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாயை அகற்றுதல்.
  • பெல்விக் லிம்ப் நோடு டிசெக்ஷன்: இடுப்பு பகுதியில் இருந்து நிணநீர் முனைகளை அகற்றுதல். 
  1. ரேடியேஷன் தெரபி:

ரேடியேஷன் தெரபியில், அதிக ஆற்றல் கொண்ட கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன, இவை புற்றுநோய் செல்களை கொல்லுகின்றன. இது பொதுவாக முற்றிய நிலை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையுடன் கூட பயன்படுத்தப்படுகிறது அல்லது சில மருத்துவ காரணங்களுக்காக அறுவை சிகிச்சை செய்ய முடியாத நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  1. கீமோதெரபி

கீமோதெரபியில், மருந்துகள் மூலம் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன. இது பொதுவாக முற்றிய நிலை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது அல்லது உடலின் மற்ற பகுதிகளுக்கு புற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக கொடுக்கப்படுகிறது.

  1. டார்கெட்டட் தெரபி மற்றும் இம்யுனோதெரபி

டார்கெட்டட் தெரபி புற்றுநோயை உண்டாக்கும் குறிப்பிட்ட மூலக்கூறுகளில் கவனம் செலுத்துகிறது. அதே சமயம், இம்யுனோதெரபி புற்றுநோய் செல்களை எதிர்க்க உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தொடர்பான கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்

கட்டுக்கதைகள் உண்மைகள்
மாதவிடாய் நின்ற பிறகு பாப் ஸ்மியர் தேவையில்லை மாதவிடாய் நின்ற பிறகும் இந்த பரிசோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
வயதான பெண்களுக்கு மட்டுமே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வரும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் எல்லா வயதுப் பெண்களுக்கும் வரலாம். இருப்பினும், வயது ஆக ஆக ஆபத்தும் அதிகரிக்கும்
HPV தடுப்பூசி பாலியலில் ஈடுபடும் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் தடுப்பூசியை HPV தொற்றுக்கு முன்னரே கொடுத்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் எப்போதும் ஆபத்தானது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

 

முடிவுரை

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஒரு பெரிய உடல்நலப் பிரச்சனை ஆகும், ஆனால் இது மிகவும் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாகவும் உள்ளது. வழக்கமான பரிசோதனைகள் மூலம், HPV தடுப்பூசியை எடுத்துக்கொள்வதன் மூலமும், சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம். இதைப் பற்றிய விழிப்புணர்வு, ஆரம்பக் கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சை ஆகியவை அதை எதிர்த்துப் போராடுவதற்கான திறவுகோல்கள்.

Our Fertility Specialists

Related Blogs