Trust img
Select City
விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

doctor image
Dr. Prachi Benara

MBBS (Gold Medalist), MS (OBG), DNB (OBG), PG Diploma in Reproductive and Sexual health

16 Years of experience
Google
Add as a preferred
source on Google

Table of Contents

குழந்தைக்காக முயலும் தம்பதியரில், ஆணின் உடல்நலம் பற்றிப் பேசவே பலரும் தயங்குகின்றனர். ஆனால் குழந்தையின்மைக்கான காரணங்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு ஆணுடன் தொடர்புடையது. நல்ல செய்தி என்னவென்றால், அன்றாட உணவில் செய்யும் சில மாற்றங்கள் விந்தணுவின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள் எவை என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

எந்த ஓர் உணவும் ஒரே நாளில் அதிசயம் நிகழ்த்துவதில்லை. ஆனால் சரியான சத்துகள் தொடர்ந்து கிடைக்கும்போது, விந்தணுவின் எண்ணிக்கை, தரம், இயக்கத்திறன் ஆகியவை படிப்படியாக மேம்படுகின்றன. இயற்கையான வழிகளில் விந்தணுவின் ஆரோக்கியத்தைக் காப்பது எப்படி, எவற்றைத் தவிர்க்க வேண்டும், எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

விந்து உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் எவை?

விந்து உற்பத்திக்கு அடிப்படையாக அமைவது சமச்சீரான உணவே. புரதம், துத்தநாகம், செலினியம், ஃபோலேட், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை நிறைந்த உணவுகள் ஆண்களின் கருத்தரிப்புத் திறனுக்கு உதவுகின்றன.

முட்டை, மீன், பருப்பு வகைகள், கீரைகள், பழங்கள், கொட்டை வகைகள், விதைகள் ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஒவ்வொன்றையும் கீழே விரிவாகப் பார்க்கலாம்.

விந்தணுவுக்கும் விந்துக்கும் என்ன வேறுபாடு?

இந்த இரண்டு சொற்களையும் பலர் ஒன்றாகவே நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் இவை வெவ்வேறு. வேறுபாட்டைப் புரிந்துகொண்டால், உணவு எதைச் சரிசெய்ய வேண்டும் என்பது தெளிவாகும்.

விந்தணு என்பது கருமுட்டையைக் கருவுறச் செய்யும் நுண்ணிய இனப்பெருக்கச் செல். இது விரைகளில் உருவாகிறது. விந்து என்பது விந்தணுக்களைச் சுமந்து செல்லும் திரவம். இதில் விந்தணுக்கள் சிறிய பகுதி மட்டுமே; மீதம் விந்துப்பையும் புரோஸ்டேட் சுரப்பியும் சுரக்கும் திரவங்களே. எனவே விந்தின் அளவு அதிகமாக இருந்தாலும் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்க முடியும். உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள விந்துப் பரிசோதனையே சரியான வழி.

விந்து குறைவதற்கான காரணங்கள் என்ன?

விந்தின் அளவு குறைவதற்கு ஒரே காரணம் இல்லை. சில காரணங்கள் உணவு, வாழ்க்கை முறையுடன் தொடர்புடையவை; சில மருத்துவ ரீதியானவை. காரணத்தை அறிந்தால்தான் சரியான தீர்வைத் தேர்ந்தெடுக்க முடியும்.

போதிய நீர் அருந்தாதது, துத்தநாகம் போன்ற சத்துகளின் பற்றாக்குறை, உடல் பருமன் ஆகியவை பொதுவான காரணங்கள். புகைபிடித்தலும் அதிக மது அருந்துவதும் விந்தணு உற்பத்தியைக் குறைக்கின்றன. தொடர்ந்த மன அழுத்தமும் தூக்கமின்மையும் ஹார்மோன் சமநிலையைக் குலைக்கின்றன. டெஸ்டோஸ்டிரோன் குறைவு, விரைகளில் நரம்பு வீக்கம் (வெரிகோசீல்), தொற்றுகள், விந்து வெளியேறும் பாதையில் அடைப்பு, சில மருந்துகள் ஆகியவையும் காரணமாகின்றன. சிலருக்கு விந்து சிறுநீர்ப்பைக்குள் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இத்தகைய மருத்துவக் காரணங்களை உணவு மட்டும் சரிசெய்யாது.

விந்தை இயற்கையாக அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் எவை?

சில எளிய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் விந்தணுவின் ஆரோக்கியம் மேம்படும். இவை விலை உயர்ந்தவையல்ல; நம் வீட்டுச் சமையலறையிலேயே கிடைப்பவை.

முட்டையில் புரதமும், வைட்டமின் பி12-உம் உள்ளன; இவை விந்தணுவின் இயக்கத்துக்கு உதவுகின்றன. கீரை வகைகளில் ஃபோலேட் நிறைந்துள்ளது. இது விந்தணுவின் மரபணு ஆரோக்கியத்துக்கு முக்கியம். தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற சத்து விந்தணுவின் இயக்கத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் ஒமேகா-3 சத்தைத் தருகின்றன. பூண்டு, வெங்காயம், இஞ்சி ஆகியவை ரத்த ஓட்டத்துக்கு உதவுகின்றன. முழு தானியங்கள், கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்கள் ரத்தச் சர்க்கரையைச் சீராக வைக்கின்றன. இவற்றை அன்றாடம் மாற்றி மாற்றிச் சாப்பிடுவது நல்லது.

விந்தின் அளவை அதிகரிக்க உதவும் பழங்கள் எவை?

எந்தப் பழமும் நேரடியாக விந்தின் அளவைக் கூட்டுவதில்லை. ஆனால் பழங்களில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகளும், நீர்ச்சத்தும் விந்தணுவைச் சேதத்திலிருந்து காக்கின்றன. அதனால் அவை பயனுள்ளவையே.

மாதுளை ஆன்டிஆக்சிடன்டுகள் நிறைந்தது. ஆரஞ்சு, நெல்லிக்காய், கொய்யா ஆகியவை வைட்டமின் சி தருகின்றன. வாழைப்பழம் வைட்டமின் பி6-ஐயும் ஆற்றலையும் தருகிறது. தர்பூசணி நீர்ச்சத்தையும் லைகோபீனையும் அளிக்கிறது. அவகேடோவில் வைட்டமின் ஈ, ஃபோலேட் ஆகியவை உள்ளன. தினமும் ஒன்றிரண்டு வகைப் பழங்களைச் சாப்பிடுவது போதுமானது.

விந்தின் அளவுக்கு உகந்த உலர் பழங்கள் எவை?

உலர் பழங்களும் கொட்டை வகைகளும் சிறிய அளவிலேயே அதிகச் சத்துகளைத் தருகின்றன. அதனால் ஆண்களின் கருத்தரிப்புக்கான உணவுப் பட்டியலில் இவற்றுக்கு முக்கிய இடம் உண்டு.

வால்நட் விந்தணுவின் தரத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பாதாமில் வைட்டமின் ஈ, துத்தநாகம் உள்ளன. பூசணி விதையும், பிஸ்தாவும் துத்தநாகத்தைத் தருகின்றன. பேரீச்சம்பழம், அத்திப்பழம், உலர் திராட்சை ஆகியவை ஆற்றலையும் இரும்புச் சத்தையும் தருகின்றன. தினமும் ஒரு கைப்பிடி அளவு போதும். அதிகமாகச் சாப்பிட்டால் எடை கூடிவிடும்.

பால் பொருட்கள் விந்தை அதிகரிக்க உதவுமா?

பால், தயிர், மோர் ஆகியவை புரதம், கால்சியம், வைட்டமின் டி ஆகியவற்றைத் தருகின்றன. இவை ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கு நல்லவை. ஆனாலும் இவை விந்தை நேரடியாகப் பெருக்கும் என்று சொல்ல முடியாது.

கொழுப்பு குறைந்த பால் பொருட்கள் விந்தணுவின் தரத்துடன் நன்மையான தொடர்பு கொண்டவை என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே நிறையக் கொழுப்புள்ள பால்கட்டி, இனிப்புகளைவிட, தயிரையும் மோரையும் தேர்ந்தெடுப்பது நல்லது. பால் ஒத்துக்கொள்ளாதவர்கள் அதற்குப் பதிலாகக் கீரை, கேழ்வரகு ஆகியவற்றிலிருந்து கால்சியத்தைப் பெறலாம்.

விந்து உற்பத்திக்குப் புரதம் அவசியமா?

ஆம், அவசியம். விந்தணுவும் உடலின் மற்ற செல்களைப் போலவே புரதத்தால் ஆனது. போதிய புரதம் கிடைக்காவிட்டால் செல் உற்பத்தி பாதிக்கப்படும்.

முட்டை, மீன், கோழி இறைச்சி, பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, சோயா, பனீர் ஆகியவை நல்ல புரத ஆதாரங்கள். ஆனால் உடற்கட்டுக்கான புரதப் பொடிகளையும் ஸ்டீராய்டுகளையும் மருத்துவ ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தாதீர்கள். அவை விந்தணு உற்பத்தியைக் கடுமையாகக் குறைக்கக்கூடும். இயற்கையான உணவுகளிலிருந்தே புரதத்தைப் பெறுவது பாதுகாப்பானது.

விந்தின் ஆரோக்கியத்துக்கு அவசியமான வைட்டமின்களும் தாதுக்களும் எவை?

விந்தணுவின் ஆரோக்கியத்துக்கான சத்துகளில் சில மிக முக்கியமானவை. இவற்றின் பற்றாக்குறை எண்ணிக்கையையும் இயக்கத்தையும் நேரடியாகப் பாதிக்கிறது.

துத்தநாகம் விந்தணு உற்பத்திக்கும் டெஸ்டோஸ்டிரோன் சுரப்புக்கும் அடிப்படை; இது பூசணி விதை, பருப்பு, கடல் உணவுகளில் உள்ளது. செலினியம் விந்தணுவின் இயக்கத்துக்கு உதவுகிறது; பிரேசில் நட்ஸ், முட்டை, மீன் ஆகியவற்றில் கிடைக்கிறது. வைட்டமின் சி, ஈ ஆகியவை விந்தணுவைச் சேதமாகாமல் காக்கும் ஆன்டிஆக்சிடன்டுகள். வைட்டமின் டி ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது; காலை வெயிலும் முட்டையின் மஞ்சள் கருவும் இதன் ஆதாரங்கள். ஃபோலேட், வைட்டமின் பி12 ஆகியவை விந்தணுவின் மரபணு ஆரோக்கியத்துக்கு முக்கியம். ஒமேகா-3 விந்தணுவின் சவ்வை வலுப்படுத்துகிறது. மாத்திரைகளாக எடுப்பதற்கு முன் மருத்துவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

விந்தின் ஆரோக்கியத்துக்கு எவற்றைத் தவிர்க்க வேண்டும்?

சத்தான உணவைச் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ, தீங்கான பழக்கங்களை விடுவதும் அவ்வளவு முக்கியம். சிலவற்றை நிறுத்தினாலே நல்ல மாற்றம் தெரியும்.

புகைபிடித்தலையும், புகையிலையையும் முழுமையாகக் கைவிடுங்கள். மதுவைத் தவிர்ப்பது அல்லது மிகக் குறைவாக வைத்துக்கொள்வது நல்லது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பொரித்த உணவுகள், பாக்கெட் நொறுக்குத்தீனிகள் ஆகியவற்றில் டிரான்ஸ் கொழுப்பு அதிகம். சர்க்கரை கலந்த குளிர்பானங்களும் எனர்ஜி பானங்களும் தேவையற்றவை. காபி, தேநீர் ஆகியவற்றை நாளொன்றுக்கு ஓரிரு கோப்பைகளுக்குள் நிறுத்துங்கள். இறுக்கமான உள்ளாடைகளையும் மடிக்கணினியைத் தொடையில் வைத்து நீண்ட நேரம் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். வெப்பம் விந்தணு உற்பத்தியைப் பாதிக்கிறது.

உணவு மூலம் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க எவ்வளவு காலம் ஆகும்?

உணவு மாற்றம் ஒரு வாரத்தில் பலன் தராது. இதற்குக் காரணம் விந்தணு உருவாகும் முறை. ஒரு விந்தணு உருவாகி முதிர்ச்சி அடைய ஏறத்தாழ 74 நாட்கள் ஆகின்றன.

எனவே குறைந்தது மூன்று மாதங்கள் தொடர்ந்து சீரான உணவையும் ஆரோக்கியமான பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும். அதன்பின் விந்துப் பரிசோதனை செய்து முன்னேற்றத்தைச் சரிபார்க்கலாம். மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகும் மாற்றம் தெரியவில்லை என்றால், தாமதிக்காமல் கருத்தரிப்பு நிபுணரை அணுகுங்கள். உணவால் சரிசெய்ய முடியாத மருத்துவக் காரணங்கள் இருக்கக்கூடும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • விந்து என்றால் என்ன?

விந்து என்பது ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் சுரக்கும் திரவம். இது விந்தணுக்களைச் சுமந்து சென்று கருமுட்டையை அடைய உதவுகிறது. இதில் விந்துப்பை, புரோஸ்டேட் சுரப்பி ஆகியவை சுரக்கும் திரவங்களும் அடங்கும்.

  • விந்தின் அளவை அதிகரிப்பது எப்படி?

போதிய நீர் அருந்துங்கள். துத்தநாகம், புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். புகை, மதுவைத் தவிர்த்து, உடல் எடையைச் சீராக வைத்து, தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். மன அழுத்தத்தையும் குறையுங்கள். அளவு மிகவும் குறைவாகவே இருந்தால் மருத்துவ ஆலோசனை தேவை.

  • ஆரோக்கியமான விந்தின் நிறம் என்ன?

வெண்மை அல்லது சாம்பல் கலந்த வெண்மை நிறம் இயல்பானது. மஞ்சள் அல்லது பச்சை நிறம் தொற்றைக் குறிக்கலாம். சிவப்பு அல்லது பழுப்பு நிறம் ரத்தக் கலப்பின் அறிகுறி. இத்தகைய நிற மாற்றங்களைக் கண்டால் மருத்துவரைப் அனுகுவது அவசியம்.

  • விந்தில் வாசனை இருப்பது இயல்பானதா?

லேசான கார வாசனை இயல்பானது. ஆனால் கடுமையான துர்நாற்றம் இருந்தால் அது தொற்றின் அறிகுறி. மீன் போன்ற வாசனையுடன் எரிச்சல் அல்லது வலியும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

  • ஒருமுறை விந்து வெளியேறும்போது எவ்வளவு வெளியாகும்?

பொதுவாக 1.5 முதல் 5 மில்லிலிட்டர் வரை வெளியாகும். இது ஏறத்தாழ ஒரு தேக்கரண்டி அளவு. அடிக்கடி வெளியேற்றம் ஏற்பட்டால் அளவு தற்காலிகமாகக் குறையும். அது இயல்பான விஷயம்.

  • விந்தின் தரத்தை மேம்படுத்த முடியுமா?

முடியும். சத்தான உணவு, உடற்பயிற்சி, போதிய தூக்கம், புகை மற்றும் மது தவிர்த்தல் ஆகியவற்றால் பெரும்பாலானோருக்கு விந்தின் தரம் மேம்படுகிறது. மாற்றம் தெரிய மூன்று மாதங்கள் வரை ஆகலாம்.

  • விந்தின் அடர்த்தி வேறுபடுமா?

ஆம். வெளியேறியவுடன் விந்து சற்றுக் கெட்டியாக இருக்கும். பதினைந்து முதல் முப்பது நிமிடங்களில் தானாகவே நீர்த்துவிடும். நீர்ச்சத்து குறைவாக இருந்தால் கெட்டியாகவும், சில சமயம் மிகவும் நீர்த்தும் தோன்றலாம். இந்த வேறுபாடு மிகத் தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் கேளுங்கள்.

To know more

Birla Fertility & IVF aims at transforming the future of fertility globally, through outstanding clinical outcomes, research, innovation and compassionate care.

Need Help?

Talk to our fertility experts

Had an IVF Failure?

Talk to our fertility experts